இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷிகா தாகூர் என்ற 17 வயதான மாணவி, ஃபிரிஸ்கோவில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதிமுதல் காணாமல் போனார். அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சிலர் மாயமான பின்னர் சடலமாக மீட்கப்பட்டு வரும் நிலையில் மாணவி மாயமானது அச்சத்தை ஏற்படுத்தியது.
அந்த மாணவியைக் கண்டுபிடித்து தர பொதுமக்களின் உதவியை காவல் துறை நாடியிருந்தது.
இந்த நிலையில், அவரைக் கண்டுபிடித்துவிட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்கள், இந்தியர்கள் மரணம் அடைவதற்கு மத்தியில் இந்திய மாணவி காணாமல் போன 2 நாட்களில் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் எங்கு கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.
முன்னதாக, ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த அப்துல் அர்பாத் என்ற 25 வயது இந்திய மாணவர், கடந்த மார்ச் 7ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ’உங்களது மகனை விடுவிக்க வேண்டுமென்றால் 1,200 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) கொடுக்க வேண்டும். பணம் தராவிட்டால், அவருடைய சிறுநீரகத்தை மாஃபியா கும்பலுக்கு விற்றுவிடுவோம்’ என மர்ம கும்பல் ஒன்று தன்னிடம் பேசியதாக அப்துல் அர்பாத் தெரிவித்திருந்தார். இதற்கிடையேதான் அவரை காவல் துறை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், அந்த மாணவர் உயிரிந்துவிட்டதாக நேற்று (ஏப்ரல் 9) இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய அல்லது இந்திய வம்சாவளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட 11வது துயரச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.