இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்சின் பிறந்த தினம் இன்று. இரண்டு முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ள சுனிதாவின் சாதனைப் பயணம் குறித்து பார்க்கலாம்.
1965ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த தீபக், ஸ்லோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். மசாச்சூசெட்சில் உள்ள நீதாம் உயர்நிலைப்பள்ளியில் 1983ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற சுனிதா, 1987ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படை அகாடமியில் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 1989இல் அமெரிக்க கப்பல்படை விமானியாக நியமிக்கப்பட்ட அவர், சோதனை விமானி பள்ளியில் 1993ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை 1995ஆம் ஆண்டு ஃபுளோரிடா தொழில்நுட்ப கழகத்தில் முடித்தார். அதனைத் தொடர்ந்து நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 1998இல் தனது பயிற்சியை தொடங்கினார்.
2006ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் முதன் முதலாக விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். டிஸ்கவரி விண்கலத்தில் அனுப்பப்பட்ட சுனிதா, 2007 ஜூன் 22ஆம் தேதி வரை விண்வெளியில் தங்கி இருந்தார். அப்போது அவர் 29 மணி நேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டு சாதனை படைத்தார்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். அப்போது 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார் சுனிதா. 127 நாட்களுக்கு பிறகு 2012ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். இரண்டு முறையும் சேர்த்து மொத்தமாக 322 நாட்கள் தங்கி சாதனை படைத்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியில் இருந்தபோதே மாரத்தான் ஓடியது போன்ற பல வித்தியாசமான முயற்சிகளையும் மேற்கொண்டார் சுனிதா. விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் சுனிதா, பெண் சமூகத்திற்கு பெரும் ஊக்கமாக திகழ்கிறார்.
நாசா அடுத்து அனுப்ப உள்ள வணிக ரீதியிலான விண்கலத்தில் செல்வோர் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்கள் பிரத்யேகமாக தயாரித்துள்ள CST -100 STARLINER மற்றும் ஸ்பேஸ் டிராகன் மூலம் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் விண்வெளிக்கு மூன்றாவது முறையாக செல்ல உள்ள பெண் என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.