அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட ஒரு இந்திய குடும்பமே கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
வட கலிபோர்னியாவின் மெர்ஸ்டு கவுண்டி பகுதியில் ஜஸ்தீப் சிங்(36) மற்றும் அவரது மனைவி ஜஸ்லீன் கவுர்(27) குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அரோகி தேடி என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட இவர்கள் அமெரிக்காவில் ட்ரக் வணிக நிறுவனத்தில் வைத்து சில நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டுள்ளனர். இந்த குடும்பத்துடன் ஜஸ்தீப்பின் சகோதரரான அமன்தீப் சிங்கும்(39) கடத்தப்பட்டுள்ளார்.
காணாமல்போன குடும்பத்தை போலீசார் தேடிவந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா சாலைக்கும், ஹட்சின்சன் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள ஒரு பழத்தோட்டத்தில் குடும்பமே கொலைசெய்யப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர். பழத்தோட்டத்தில் வேலைசெய்யும் விவசாயி ஒருவர் இறந்த சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் மெர்ஸ்டு கவுண்ட்டி போலீசார் அங்கு விரைந்துசென்று அந்த உடல்களை அடையாளம் கண்டுள்ளனர்.
இதுகுறித்து மெர்ஸ்டு கவுண்டி ஷெரிப் வெர்ன் வார்ன்கே கூறுகையில், ‘’8 மாத குழந்தை உட்பட 4 பேரின் உடல்களும் புதன்கிழமை பழத்தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையால் ஏற்பட்ட என்னுடைய கோபத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை’’ என்று கூறியுள்ளார். மேலும் புதன்கிழமை குடும்பமே கடத்தப்பட்ட சிசிடிவி வீடியோவை போலீசார் வெளியிட்டனர். அதில், முதலில் வியாபார ஸ்தலத்திலிருந்து ஜஸ்தீப் மற்றும் அமன்தீப் இருவரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் வெளியே வருகின்றனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, தாயும் குழந்தையும் கடத்தல்காரரால் வெளியே கொண்டுவரப்படுகின்றனர். அங்கிருந்து லாரியில் ஏற்றி எங்கோ கொண்டுசெல்லப்படுகின்றனர். இந்த வீடியோ கிடைத்த சிலமணிநேரங்களிலேயே பழத்தோட்டத்தில் குடும்பமே கொலைசெய்யப்பட்டு கிடந்த தகவல் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர் 48 வயதான ஜீசஸ் மானுவேல் சால்கடோ என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட அந்த நபர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். போலீசார் அவரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சால்கடோ குறித்து ஷெரிப் கூறுகையில், ‘’இந்த நபருக்கு நரகத்தில் சிறப்பான இடம் இருக்கிறது’’ என்று கூறியுள்ளார். சால்கடோவின் குடும்பத்தை தொடர்புகொண்ட போலீசார், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
ஜஸ்தீப்பின் தந்தை ராந்திர் சின் ஒரு மருத்துவர். அவர் தனது மனைவி கிபால் கவுருடன் சொந்த ஊரான ஹோஷிபூரில் (பஞ்சாப்) வசித்துவருகிறார்.