இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் தனேஜா என்பவர் வாஷிங்டன் டிசியின் வர்ஜீனியா புறநகர்ப் பகுதியான அலெக்ஸாண்ட்ரியாவில் வசித்து வந்தபடியே, அங்குள்ள டைனமோ டெக்னாலஜி நிறுவனத்திலும் இணை நிறுவனராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி, 15-வது தெருவின் 1100வது பிளாக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வெளியே விவேக் தனேஜாவுக்கும் மற்றொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் தனேஜாவின் தலையில் கடுமையாக தாக்கி கீழே தள்ளியிருக்கிறார். இதில் பலத்த அடிபட்ட அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தாக்கிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் குறித்து தகவல் கொடுத்தால் அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 4 இந்திய மாணவர்கள் இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீல் ஆசாரியா, ஷ்ரேயாஸ் ரெட்டி பினிகர், விவேக் சைனி ஆகியோரும் மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வார தொடக்கத்தில் சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலியை மர்ம நபர்கள் கடுமையாக தாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான்: இம்ரான்கான் கட்சி முன்னிலை.. ஆனால் கூட்டணி ஆட்சி அமைக்கும் நவாஸ் ஷெரீப்!