ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாக்டலென் கல்லூரியைச் சேர்ந்த, மனிதஅறிவியல் துறை மாணவி அன்வி பூட்டானி மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
ஏற்கெனவே மாணவர் சங்க தலைவராக இருந்த இந்திய மாணவி ரஷ்மி சமந்த் பதவி விலகிய பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அன்வி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரஷ்மி சமந்த் சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதால் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆக்ஸ்போர்டு மாணவர் சங்கத்தில் இன விழிப்புணர்வு மற்றும் சமத்துவத்திற்கான இணைத் தலைவராகவும், ஆக்ஸ்போர்டு இந்தியா சொசைட்டியின் தலைவருமாக மாணவர்களிடம் நல்ல அறிமுகத்துடன் இருந்ததால் அன்வி பூட்டானி மிகப்பெரிய சாதனை வெற்றியை பெற்றார். அன்வி இனவிழிப்புணர்வு, மாணவர்களின் மனநலன் மேம்பாடுக்கு கூடுதல் நிதி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.
அன்விக்கு 2,506 பேர் வாக்களித்ததால், 2019 ஆம் ஆண்டின் தேர்தலைவிடவும் 146 சதவீதம் அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைந்திருக்கிறார் . இந்த ஆக்ஸ்போர்டு மாணவர் சங்க தலைவருக்கான போட்டியில் 11 பேர் களத்தில் இருந்தனர்.