ஆஸ்திரேலியாவில் நர்சிங் பயின்று வந்த இந்திய மாணவியை அவரின் முன்னாள் காதலன் உயிருடன் புதைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ல் நடந்ததாகக் கூறப்படும் இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது நீதிமன்ற விசாரணையின்போது வெளிவந்துள்ளன.
இதில் கொலை செய்யப்பட்ட பெண் ஜாஸ்மீன் கவுர் (வயது 21) எனவும், கொலை செய்த நபர் தாரிக்ஜோத் சிங் (23) என்றும் தெரியவந்திருக்கிறது. ஜாஸ்மீன் கவுரும், தாரிக்ஜோத் சிங்கும் காதலித்துவந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காதலனுடனான உறவை துண்டித்தார் ஜாஸ்மீன் கவுர். இதனால் ஆத்திரமடைந்து ஜாஸ்மீன் கவுரை பழிவாங்க முடிவு செய்த தாரிக்ஜோத் சிங், 5 மார்ச் 2021 அன்று நார்த் பிளம்ப்டனில் ஜாஸ்மீன் கவுர் வேலை பார்க்கும் இடத்திலிருந்து அவரை காரில் கடத்தியுள்ளார். மறுநாள் (மார்ச் 6) ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் என்ற மலைப்பகுதிக்கு கடத்திச் சென்ற அவர், ஜாஸ்மீனை கொடூரமாக தாக்கிவிட்டு, ஆழமற்ற கல்லறையில் உயிருடன் புதைத்திருக்கிறார்.
ஜாஸ்மீன் கொலை செய்யப்பட்ட சில மணிநேரத்திற்கு முன்பு மைல் எண்ட் பகுதியில் உள்ள கடையில் தாரிக்ஜோத் சிங் கையுறைகள், கேபிள் டை மற்றும் ஒரு மண்வெட்டியை வாங்குவது சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
விசாரணையின்போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் தெற்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை மற்றும் எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதுதான் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தாரிக்ஜோத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த கொலை சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் கொலை குற்றத்திற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு கொலை குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.