துபாயில் வேலைபார்க்கும் கேரள டிரைவருக்கு லாட்டரி சீட்டில் ரூ.21 கோடி பரிசு கிடைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் ஜான் வர்கீஸ். கடந்த 2016ம் ஆண்டு முதல் துபாயில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். லாட்டரி குலுக்கலில், இவருக்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.21.21 கோடி.
சந்தோஷத்தில் திக்குமுக்காடி போன வர்கீஸ், ‘இது பெரிய அதிர்ஷ்டம். இதுபற்றிய அழைப்பு வந்தபோது, என்னால் நம்ப கூட முடியவில்லை. நண்பர் யாரோ கிண்டல் செய்கிறார் என்றுதான் நினைத்தேன். உறுதியான பின் கேரளாவில் உள்ள என் குடும்பத்தினருக்கு தகவல் சொன்னேன். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பரிசு பணத்தில் முதலில் ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டும். என் குழந்தைகளின் கல்விக்கு பணத்தை முதலீடு செய்ய இருக்கிறேன். அதில் ஒரு பகுதியை கொண்டு சிலருக்கு உதவ இருக்கிறேன்’ என்கிறார் வர்கீஸ்.
கடந்த ஜனவரி மாதமும் இங்கு நடந்த லாட்டரி குலுக்கலில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு இதே அளவு பரிசு கிடைத்தது.