அமெரிக்க வன்முறையில் இந்திய தேசியக் கொடி பயன்படுத்தப்பட்டதற்கு இந்தியர்கள் பலர் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.
அமெரிக்காவே வன்முறையால் தலைகுணிந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற வளாகம் இன்று போர்க்களமாக காட்சி அளிக்கிறது.
ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் இன்று கூடியது. ஆனால் அந்த நிகழ்ச்சி நினைத்தபடி முடிவடையவில்லை. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 2 மைல் தொலைவில் ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர். ஜோ பைடனுக்கு எதிராக குரல் எழுப்பினர். அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூடாதென முழக்கமிட்டனர்.
வெள்ளை மாளிகையில் புகுந்து சூறையாடினர். போலீசாருக்கு, ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு. இதுவரை 4 பேர் பலி என்கிறது அந்நாட்டு ஊடகம். இரு அவையின் கூட்டுக் கூட்டம் நிறுத்தப்பட்டது. முக்கியத் தலைவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் இன்றைய நாளை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. உலகத் தலைவர்கள் அமெரிக்க வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். “அமைதியான வழியில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும்” என பிரதமர் மோடியும் கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்த பரபரப்பான வன்முறையில் இந்திய தேசியக் கொடியும் பறந்துகொண்டிருந்தது தான் தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. வெள்ளை மாளிக்கைக்கு எதிரே வன்முறையில் ஈடுபட்ட கூட்டத்தினர் அமெரிக்க கொடிகளை கையில் ஏந்தி முழக்கமிட்டனர். ட்ரம்புக்கு ஆதரவான பேனர்களை தூக்கிக் கொண்டு சுற்றினர். அந்த இடத்தில் இந்தியாவின் மூவண்ணக் கொடி ஒன்றையும் ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் கொண்டு சென்றார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
''ஒரு வன்முறையில், வேறு நாட்டில் இந்திய கொடி பறப்பது இந்தியாவுக்கு அவமானம்'' என பலரும் பதிவிட்டு வருகின்றனர். ''தேசியக் கொடி ஒரு உணர்ச்சிப் பூர்வமான விஷயம். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அதனை உள்நாட்டு பிரச்னைகளில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கது'' என அனல் கக்குகின்றனர் இந்தியர்கள். ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க வாழ் இந்தியர் யாரோ இந்திய கொடியை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.