எகிப்தில் தன் திருமணத்தை மிகப் பிரமாண்டமாய் நடத்தி முடித்திருக்கிறார் இந்திய வம்சாவளி கோடீஸ்வராரன அங்குர் ஜெயின். மணப்பெண் யார் தெரியுமா..? முன்னாள் WWE மல்யுத்த வீராங்கனையான எரிக்கா ஹம்மண்ட். இதையடுத்து யார் இந்த அங்குர் ஜெயின் என்ற ஆர்வம் பலருக்கும் வந்திருக்கிறது. அதற்கான பதிலை, இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க...
Bilt Rewards & Kairos நிறுவனங்களின் CEOவான அங்குர் ஜெயின் தன் நண்பர்கள், உறவினர்கள் என 130 பேரை எகிப்திற்கு அழைத்துச் சென்று அங்கு தன் ஆசைக் காதலியான எரிக்காவை திருமணம் செய்திருக்கிறார். இளசுகள் மத்தியில் பிரபலமான Tinder நிறுவனத்தின் vice presidentஆக இருந்த அங்குர் அதன் பின்னர் ஆரம்பித்த நிறுவனம்தான் Bilt Rewards.
விண்வெளியில் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அங்குர் ஜெயினின் ஆசையாம். அதை எரிக்காவிடம் அவர் தெரியப்படுத்த, ‘திருமண நாள் அன்னிக்கே என்னைய சாகடிக்க பாக்கறியா’ என பீதியாகி மறுத்துவிட்டாராம். அதனால், எகிப்தை தேர்வு செய்திருக்கிறார் அங்குர் ஜெயின்.
அமெரிக்காவின் நியூ யார்க்கில் இருக்கும் அங்குர் ஜெயினுக்கு தன் திருமணம் ஒரு புதிய உலகில் நடக்க வேண்டும் என ஆசையாம். அதனால்தான் பிரமிடுகள் சூழ் எகிப்த்தை தேர்வு செய்ததாக சொல்கிறார். மம்மி படத்தில் பார்த்திருப்போமே... அத்தகைய பிரமிடுகளுக்கு மத்தியில் மோதிரத்தை மாற்றி திருமணம் செய்திருக்கிறார் அங்குர்.
2013ம் ஆண்டு WWE NXT DIVAவாக அறிமுகமானவர்தான் எரிக்கா. அதன் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் ஃபிட்னெஸ் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். ஃபிட்னெஸ் செயலியான Strong-ஐ உருவாக்கியதும் எரிக்காதான். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த அவர் அங்கிருந்து குடிபெயர்ந்து நியூயார்க் வந்திருக்கிறார். அங்குதான் இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. rumble boxing என்கிற பெயரில் பிரபலங்களுக்கென பிரத்யேகமான ஜிம்மில்தான் எரிக்காவை சந்தித்திருக்கிறார் அங்குர். அந்த ஜிம்மில் அங்குரின் ஃபிட்னெஸ் கோச் எரிக்காதான். 2022ம் ஆண்டே இருவரின் திருமணமும் நிச்சயக்கப்பட்டுவிட்டாலும், திருமணத்தை மிகப் பிரமாண்டமாய் நடத்தவேண்டும் என்பதற்காக இத்தனை நாள் காத்திருந்தார்களாம். எரிக்காவின் திருமண ஆடையான தங்கத்திலான கௌனை வடிவமைத்தவர் இந்திய டிசைனரான ராகுல் மிஸ்ரா.
அங்குரைவிடவும் திருமணத்தை பார்க்கச் சென்ற 130 பேரும் பயங்கர குஷியாகியிருப்பார்கள். காரணம், அவர்கள் அனைவருக்கும் 3 நாள் ஆப்பிரிக்கன் சஃபாரிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அங்குர். அதன் வாடகை ஒரு நாளைக்கு ஒருவருக்கு 1.65 லட்ச ரூபாயாம்.