ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா வந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடைபெற்ற வெளியுறவு தொடர்பான கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய ஜெய்சங்கர், "கடந்த 75 ஆண்டுகளாக, இந்தியா - சீனா இடையிலான உறவுகள் பல்வேறு நிலைகளை கடந்து வந்துள்ளது. இருநாடுகளுக்கு இடையில் நல்லுறவு இருப்பது என்பது எளிதான ஒன்று அல்ல. ஆனால் தற்போது இருநாடுகளுக்கும் இடையேதொடர்ந்து பிரச்னைகள் நீடித்து வருகிறது. தற்போது கனடாவில் அரங்கேறிய படுகொலை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றச்செயல் .அது தொடர்பான தகவல்களை கனடா அரசுக்கு மத்திய அரசு சார்பில் பகிர்ந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும் ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய ஐநாவின் கனடா தூதர் ராபர்ட் ரே, கூறுகையில், ”வெளிநாட்டு தலையீடுகளால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது.சுதந்திரம் மற்றும் ஜனநாயக சமூகங்கள் குறித்து பேச வேண்டிய சூழலும் இப்போது ஏற்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளுக்காக, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதிகளை வகுக்க முடியாது.வெளிநாடுகளின் தலையீட்டால், ஜனநாயகங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், திறந்த மற்றும் சுதந்திரமான சமூகங்கள் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும். ” என்று தெரிவித்தார்.
கனடாவில், சில மாதங்களுக்கு முன்பு காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரத்தால், இந்தியா - கனடா இடையிலான இருதரப்பு உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு தூதரக அதிகாரிகள் மீதான நடவடிக்கை, விசா கட்டுப்பாடு என அடுத்தடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஐநா பொதுச்சபையில் கனடா தூதர் தற்போது பேசியுள்ளது, மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.