அமெரிக்காவின் பல்வேறு முக்கிய மாநகரங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணிகளும், போராட்டங்களும் நடைபெற்றன.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களில் இத்தகையப் போராட்டங்கள் நடைபெற்றன. இதுஒருபுறம் இருக்க சிஏஏவுக்கு ஆதரவாகவும் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பாஜக சார்பில் விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் சிஏஏவுக்கு ஆதரவாக பேரணிகள் நடைபெற்றன. குடியுரிமை சட்டம் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பேரணியில் பங்கேற்றோர் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் சியாட்டல், ஹவுஸ்டன், டப்லின், டல்லாஸ், சிகாகோ, சான் ஃபிரான்சிஸ்கோ, நியூயார்க், வாஷிங்டன், அட்லான்டா சான் ஜோஸ் ஆகிய இடங்களில் போராட்டங்களும் பேரணியும் நடைபெற்றன.
இந்தப் பேரணிகளை ஒருங்கிணைத்த வினீத் கோயல் கூறியது " இந்தப் பேரணியை நாங்கள் ஒருங்கிணைத்தது ஏன் என்றால், சிஏஏ சட்டத்தை தவறாக மக்களிடம் எடுத்துச் சென்ற இஸ்லாமிய மற்றும் இடதுசாரியினரின் போலி முகத்திரையை கிழிக்கதான். அத்தகையை அமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் தவறான கருத்தை பரப்புகின்றனர்" என்றார் அவர்.
சியாட்டல் மாநகரில் பேரணி நடத்திய அர்ச்சணா சுனில் கூறும்போது "இந்தியாவில் போராட்டம் நடத்தும் பல அமைப்புகளும் கட்சிகளும் குடியுரிமை சட்டம் தொடர்பான எந்த உண்மையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை" என்கிறார்.