இரவு நேரத்தில் பார்க்கிங் இடத்தில் நின்றிருக்கும் இரு நபர்கள் ஆக்ரோஷமாக பேசியபோது, ஒருவர் தாக்கியதில் எதிரில் இருந்தவர் சரிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் மீண்டும் இந்தியாவுக்கு அதிர்ச்சியாக செய்தியை கொடுத்துள்ளது.
உயிரிழந்த அந்த நபர், இந்தியர் என்ற தலைப்புகளோடு இணையத்தில் வட்டமடிக்கும் முழு விவரத்தை அலசினோம். அதில், உயிரிழந்த நபர், ஹேமந்த் மிஸ்ட்ரி (59), குஜராத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் இருக்கும் மோட்டலில் மேனேஜராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு 10 மணியளவில் மோட்டல் பார்க்கிங்கில் நின்றிருந்த நபரை வெளியேறுமாறு கூறியுள்ளார் மிஸ்ட்ரி. அப்போது, அந்த நபர் வெளியேற மறுத்து வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நீடிக்கிறது. ஒருகட்டத்தில் மோட்டல் மேலாளர் மிஸ்ட்ரியை அவரது முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார் அந்த நபர். இதில் மிஸ்ட்ரி அந்த இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்த நிலையில், அதற்கு பிறகு எதுவுமே நடக்காதது போன்று அந்த நபர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மிஸ்ட்ரி விழுந்த ஒருசில நொடிகளில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியபடி அங்கு ஓடி வந்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார் விழுந்து கிடந்த மிஸ்ட்ரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர், 41 வயதான ரிச்சர்டு லெவிஸ் என்பது தெரியவந்தது. தாக்குதல் நடத்திவிட்டு வேறு ஒரு ஹோட்டலில் சென்று தங்கியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய போலீஸார், ”மீட்கப்பட்ட மிஸ்ட்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 23ம் தேதி இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பதுங்கி இருந்த ரிச்சர்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மிஸ்ட்ரி, ரிச்சர்டை ஏன் வெளியேறச் சொன்னார் என்பது தெரியவரவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் மீண்டுமொரு மரணம் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.