தன்னுடைய ஆட்சியை கலைப்பதற்காக இந்தியாவில் மறைமுகமாக பல சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன என்று நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவும் நேபாளமும்1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில், 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது.
இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு நேபாளம் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்த கட்டமாக வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது அந்த வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நேபாள பிரதமர் ஷர்மா ஓலி "டெல்லியில் இருந்து எனக்கு தகவல்கள் வருகிறது. இந்தியா பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறது. அது நேபாளத்துக்கு எதிராக இருக்கிறது. மேலும், நேபாளத்தின் புதிய வரைபடத்துக்கு எதிராக திட்டமிட்டு வருகிறது. மேலும் என்னுடைய ஆட்சியை கலைக்கவும் திட்டமிட்டு வருகிறது. நேபாளத்தின் தேசியம் அவ்வளவு வலுவிழந்ததல்ல. நேபாள வரைபடத்தை மாற்றியதற்கு இந்தியா பெரும் குற்றமாக கருதுகிறது" என்றார்.
மேலும் பேசிய அவர் "நேபாளத்தில் 15 நாளில் பிரதமர் மாறிவிடுவார் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். அப்படி நான் மாறினாலும் நேபாளத்துக்கு எதிராக பேசுபவர்கள் உடனடியாக பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவார்கள். நான் இதனை எனக்காக பேசவில்லை. நேபாளத்துக்காக பேசுகிறேன். நம்முடைய நாடாளுமன்றம் அண்டை நாட்டின் அரசியல் சதிக்கு எப்போதும் வீழ்ந்துவிடாது" என தெரிவித்துள்ளார்.