பலுசிஸ்தான் மனித உரிமை செயல்பாட்டாளர் கரீமா பலூச், கனடாவில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரீமா பலூச்... இந்தப் பெயர் பலுசிஸ்தான் விவரங்களை அறிந்தவர்களுக்கு நன்கு பரிச்சயம். பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் ராணுவத்தின் அத்துமீறல்களை எதிராக குரல் கொடுத்து வந்தவர் கரீமா பலூச். பலூச் மாணவர் அமைப்பின் முதல் பெண் தலைவராக இருந்தவர் இவர். 2006-ல்தான் இந்த அமைப்பில் சேர்ந்தார் என்றாலும், அடுத்தடுத்து பல பதவிகளை இந்த அமைப்பில் வகித்து வந்தார். பிரிவினைவாத அமைப்பாக பாகிஸ்தான் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு, இந்த அமைப்பு 2013ல் தடை செய்யப்பட்டு வந்தது. எனினும் இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பின் தலைவராக 2015-ல் கரீமா பொறுப்பேற்று செயல்பட்டு வந்த நிலையில், அவர் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தியது பாகிஸ்தான் அரசு.
கூடவே உயிருக்கு அச்சுறுத்தல் வர பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். கனடாவில் தஞ்சம் புகுந்தார். கடந்த 5 ஆண்டுகளாக கனடாவில் இருந்தபடியே சமூக ஊடகம் வழியாக பலுசிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காக பேசி வந்தார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.
இதற்கிடையே, திங்கள்கிழமை இவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கனடா போலீஸார், கரீமா திங்கள் கிழமை மரணம் அடைந்திருக்கிறார். அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த குற்றச் சம்பமும் நடைபெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று கூறியுள்ளனர்.
போலீஸ் இப்படி கூறினாலும், கனடாவுக்கு புலம்பெயர்ந்ததில் இருந்தே உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்தார் கரீமா. சமீபத்தில்கூட, யாரோ ஒருவர் அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசு அனுப்பி, `பாடம் கற்பிக்கப்படும்' என்று மிரட்டல் வந்ததாக பிபிசியிடம் கரீமாவின் நண்பர் லத்தீப் என்பவர் கூறியுள்ளார்.
கரீமா பலுசிஸ்தான் பகுதியின் மனித உரிமை போராளியாக வலம்வந்தவர். பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் அரசை எதிர்ப்பவர்கள் அடிக்கடி காணாமல் போய், பின்னர் சடலமாக மீட்கப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. இதனை எதிர்த்து பல்வேறு ஆண்டுகளாக போராடி வந்தார் கரீமா.
கரீமா மட்டுமின்றி, அவரின் குடும்பத்தினரும் இந்த வகையான போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். இதனால் சில உயிர்களும் அவரின் குடும்பத்தில் பறிபோயுள்ளன. மனித உரிமை போராளியாக அறியப்பட்ட கரீமாவை, கடந்த 2016ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் சேர்த்து பெருமைப்படுத்தியது பிபிசி.
தற்போது நிகழ்ந்துள்ள அவரின் மரணம் பலுசிஸ்தான் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்காக பலுசிஸ்தான் மக்கள் 40 நாள்கள் துக்கம் கடைபிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
மரணத்தில் சந்தேகம் எழுப்பிய இந்தியா!
கரீமா பலுசிஸ்தான் செயல்பாட்டாளராக இருந்தாலும், இந்தியாவின் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டி இருக்கிறார். பலுசிஸ்தான் விவகாரத்தில் மோடி உதவ வேண்டும் என நேரடியாக கோரிக்கையும் விடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில், அவரின் மரணத்தில் நாடகம் இருக்கலாம், விரிவான விசாரணை தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் எந்த குற்றச் சம்பமும் நடைபெறவில்லை என்று கனடா காவல்துறை அறிவிப்பில் தேவையற்ற அவசரம் இருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி, ஒரு முக்கிய பலூச் அரசியல் ஆர்வலர் கரீமாவின் மர்மமான மரணத்திற்குப் பின்னால் மோசமான நாடகம் இருப்பதாகக் கூறி, பலூச் தலைவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் பாகிஸ்தானின் இரகசிய அமைப்புகளின் இலக்கில் இருப்பதால் பாதுகாப்பு தேவை என்று டைம்ஸ் நவ் சேனலுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, கரீமா காணாமல் போனதும் டொரொன்டோ காவல்துறையினர் அவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் உதவியைக் கோரியிருந்தனர், ஆனால் பின்னர் அவரது உடல் டொராண்டோவின் லேக்ஷோர் அருகே ஒரு தீவில் இருந்து அவரது உடல் நீரில் மூழ்கியிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். சில மாதங்களுக்கு முன்பு, பலுசிஸ்தானில் இருந்து வெளியேறி ஸ்வீடனில் தங்கியிருந்தவர் கரீமாவின் உறவினரான சஜ்ஜித் உசேன் பலூச். பத்திரிகையாளரான இவரும் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.