ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மியான்மர் நாட்டில் வசித்துவரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக அவர்கள் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு அகதிகளாக செல்கின்றனர். கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து நேற்றுவரை இரண்டு வார காலத்தில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ளனர் என ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் சட்டத்துக்கு விரோதமாக குடியேறியவர்கள், அவர்கள் இந்திய சட்டத்தின்படி நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி இருந்தார். இதனையடுத்து, ரோஹிங்கியா இஸ்லாமியர்கள், ஜம்மு-காஷ்மீர், பத்திரிக்கையாலர் கவுரி லங்கேஷ் கொலை உள்ளிட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்தது. ரோஹிங்கியா இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப இந்தியா முடிவெடுத்திருப்பது குறித்து விமர்சனங்களை முன் வைத்தத ஐ.நா. சபை சர்வதேச அளவிலான அகதிகள் சட்டதிட்டத்தை மதித்து நடவடிக்கைகள் அமையவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இந்த நிலையில்தான், மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்பட்டு விடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சந்தர், ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது இதனை தெரிவித்தார்.