தனது நாட்டு நாணயத்தின் சரிவை தடுத்து நிறுத்த புதின் இதுவரை உலக நாடுகள் செய்ய தயங்கிய (தயங்கும்) புதிய திட்டத்தை கையில் எடுத்தார். அதுதான் டாலரல்லாத வர்த்தகம்!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 7 மாதங்களை கடந்துவிட்டது. இன்றும் இருதரப்பும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. எல்லாப் பகுதிகளிலும் ஒரு சேர தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு, ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நகரத்தின் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கேற்ற வகையில் தனது போர் முறைகளை மாற்றியுள்ளது. முன்னதாக ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய யூனியன் ஆகியவை ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தன. பொருளாதார ரீதியாக உலகளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியாக தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்டன. இன்றும் அந்த தடைகள் தொடர்ந்து வருகின்றன.
போரால் சரிந்த ரஷ்யாவின் ரூபிள்!
கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் விதமாக “ஸ்விஃப்ட் வங்கி” நடைமுறையிலிருந்து ரஷ்யாவின் முக்கிய வங்கிகள் நீக்கப்பட்டன. இதனால் ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ நாணயமான ரூபிள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 80-தில் இருந்து 119 ஆக சரிந்தது. ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 29% சரிவை சந்தித்தது. மேலும் அணு ஆயுதங்களை தயாராக வைக்கச் சொல்லி புதின் உத்தரவிட்டதாக செய்தி பரவிய போது தான் , ரஷ்யா ரூபிள் இவ்வளவு மோசமான சரிவை சந்தித்தது. தனது நாட்டு நாணயத்தின் சரிவை தடுத்து நிறுத்த புதின் இதுவரை உலக நாடுகள் செய்ய தயங்கிய (தயங்கும்) புதிய திட்டத்தை கையில் எடுத்தார். அதுதான் டாலரல்லாத வர்த்தகம்!
ரூபிளை மீட்க புது திட்டம்!
தனது நாணயமான ரூபிளின் மதிப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதின் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் ஸ்விஃப்ட் வங்கி நடைமுறையில் இருந்து தடை செய்யப்படாத சிறிய ரஷ்ய வங்கிகளை முன்பைவிட ஆக்டிவாக செயல்பட அறிவுறுத்தப்பட்டது. ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நாடுகளுக்கு அந்த வங்கிகள் தேவையானவற்றை செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகள் நிலைமை மோசமாவதை தடுக்க மட்டுமே உதவும் என்பதும் ரஷ்யாவுக்கு தெரிந்து இருந்தது.
இனி ரூபிள் வர்த்தகம்தான்! நோ டாலர்!
சர்வதேச சந்தையில் சரிந்த ரூபிளை தூக்கி நிறுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ரஷ்யா. அதுவும் தங்கள் மீது பொருளாதார தடை விதித்து இந்த நிலைக்கு காரணமான நாடுகளை குறிவைத்து அந்த அறிவிப்பை வெளியிட்டார். தங்கள் மீது பொருளாதார தடை விதித்த “நட்பற்ற நாடுகளுக்கும்” ரஷ்யா பெரிய மனதுடன் தொடர்ந்து எரிவாயுவை வர்த்தகம் செய்யும். ஆனால் அமெரிக்க டாலரில் அல்ல! ரஷ்யாவின் ரூபிளில்! என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார் புதின். இந்த புதிய வர்த்தகத்துக்கான நெறிமுறைகள் இன்னும் ஒரே வாரத்தில் வெளியாகும் என அறிவித்தார் புதின்.
எரிவாயுவில் மட்டும் ஏன் ரூபிள் வர்த்தகம்?
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு அவர்களது நாணயத்தை சரிவிலிருந்து மீட்பது மட்டுமல்ல! தங்கள் மீது தடையும் விதித்துவிட்டு தங்களிடம் பல வர்த்தகங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஐரோப்பிய யூனியனுக்கு சரியான பாடம் புகட்டவும் தான். ஏகப்பட்ட வர்த்தகங்களை செய்து வந்த போதிலும் ஐரோப்பிய யூனியனுக்கு அதிக எரிவாயுவை வழங்கிக் கொண்டிருந்த நாடு ரஷ்யா. மொத்த எரிவாயு தேவையில் 40% க்கு மேல் ரஷ்யாவை, அதை மட்டுமே நம்பியிருந்தது. ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்க அமெரிக்கா வலியுறுத்திய போது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டன. ஏனென்றால் அந்த நாடுகளுக்கு ரஷ்யாவை விட்டால் எரிவாயுக்கு சிக்கல் ஏற்பட்டு அவர்கள் பொருளாதாரத்தின் ஆணிவேரே ஆடிப்போய்விடும். அதனால் தான் ரஷ்யா எரிவாயுவில் இறங்கி அடித்தது.
பலன் அளித்ததா புதினின் அறிவிப்பு?
புதினின் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வர நிச்சயம் காலம் பிடிக்கும் என்பது அவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். ஏனெனில் பல எரிவாயு ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டவை. அவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டு அவை மற்ற நாடுகளால் ஏற்கப்பட வேண்டும். ஆனால் இது பற்றியெல்லாம் புதின் யோசித்திருப்பாரா என்னவோ.... அவரது இந்த அறிவிப்புக்கே கைமேல் பலன் கிடைத்தது. ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு சட்டென்று உயரத் துவங்கி 95 ரூபாய்க்கு வந்தது. 119 ரூபாயில் இருந்து 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. இன்னும் 15 ரூபாய் மட்டும் உயர்ந்துவிட்டால் உக்ரைன் போருக்கு முந்தைய நிலையை ரூபிள் எட்டிவிடும் என்று உலக பொருளாதார நிபுணர்கள் ரஷ்யா மீது தங்கள் கவனத்தை திருப்பினர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் இந்த சூழலைப் பயன்படுத்தி அதனிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கும் அளவை பல மடங்கு உயர்த்தின. எப்படி பார்த்தாலும் ரஷ்யாவுக்கும் இந்த வர்த்தகத்தில் மிகப்பெரிய லாபம் என்பதால் அந்நாடும் வரிந்து கட்டிக் கொண்டு இந்த புது வர்த்தகத்தில் இறங்கியது. விளைவு என்ன தெரியுமா? இன்று டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 60 என்ற அளவில் நீடிக்கிறது. உக்ரைன் போருக்கு முன்பு இருந்ததை விட மிக நல்ல நிலைக்கு தனது நாட்டு நாணயத்தின் மதிப்பை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் புதின். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை இடது கையால் டீல் செய்து நகர்ந்துவிட்டார் புதின்.
டாலர் வர்த்தகம் Vs ரூபிள் வர்த்தகம்
மேலோட்டமாக பார்த்தால் ரஷ்யா மேற்கத்திய நாடுகளுடன் (ஐரோப்பிய யூனியனுடன்) மோதுவது போல் தெரிந்தாலும் அது கமுக்கமாக கைவைத்திருப்பது அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தில்! உலகம் முழுக்க சந்தை அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. ஒரு நாடு எந்த பொருள் வாங்கினாலும் முதலில் தனது பணத்தை அமெரிக்க டாலராக மாற்றும். அதன் பின் மற்றோரு டாலரை வைத்து வணிகம் செய்யும். எந்த சிரமமும் இல்லாமல் பயணிக்கும் இந்த இடைத்தரகர் “டாலர்” மூலம் அமெரிக்கா கொள்ளை லாபம் பார்ப்பதாக அடிக்கடி புகார் எழுந்து அது அடங்கிப் போய்விடும். எந்த நாடாவது டாலர் வணிகத்தை விட்டு வெளியேறினால் அந்த நாட்டில் அமெரிக்கா தன்னாலான அனைத்தையும் செய்து அந்த எண்ணத்தை வேரோடு நீக்கிவிடும்.
ஆனால் பல நாடுகள் மறைமுகமாக, நேரடியாக பல நாடுகள் டாலர் வணிகத்தை சின்னச் சின்ன விசயங்களில் மீறத் துவங்கி விட்டன. இந்தியா பல முறை ஈரான், ஈராக்கிடம் இருந்து பெட்ரோலை டாலரல்லாத வர்த்தகத்தில் பெற்றுவிட்டது. ஐரோப்பிய யூனியனின் யூரோவை வைத்து ரஷ்யாவும் இன்னும் பல நாடுகளும் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தன. சர்வதேச வணிகத்தில் மிக முக்கியமான கச்சா எண்ணெய் அடிக்கடி டாலர் வணிகத்தை விட்டு வெளியேறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கும். தற்போது இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் நெடுநாள் நட்பை அடிப்படையாக வைத்து, தடாலடியாக ஒரு தனி வர்த்தகத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளன. அதாவது ரஷ்யா - இந்தியா இடையில் நடைபெறும் வர்த்தகம் இனி ரூபாய் - ரூபிள் வர்த்தகமாக நடைபெற உள்ளது. இடைத்தரகர டாலருக்கு இனி இடமில்லை என்று இரு நாடுகளும் முடிவு செய்திருக்கின்றன.
டாலரல்லாத வர்த்தகத்தால் என்ன பலன்?
இப்படி டாலரை புறக்கணித்து வணிகம் செய்வது யாருக்கு லாபம் தரும் என்று சந்தேகம் வரலாம். குழப்பம் தேவையில்லை. இரு நாடுகளின் வணிகத்தில் எதையும் கிள்ளிப்போடாமல் நாணயத்தின் மூலம் பைசா செலவில்லாமல் லாபம் பார்க்கும் அமெரிக்காவின் பங்கு “கட்” ஆகி விடும். கட் ஆகும் அந்த பங்கு வணிகத்தில் ஈடுபடும் இரு நாடுகளுக்கு அவைகளின் சக்திக்கு ஏற்ப பிரித்துக் கொள்ளப்படும். எவ்வாறு அந்த கட் ஆகும் பங்கு பகிரப்பட போகிறது என்பது அந்த நாடுகளுக்கு இடைப்பட்ட பிரச்னை. ஆனால் இந்த “கட்” ஆகும் லாபம் அமெரிக்காவுக்கு பெரும் பிரச்னை.
அவ்வளவு லாபமா டாலரல்லாத வணிகத்தில்?
ஏதோ கொசுறு லாபம் கிடைக்கும், இதற்கு ஏன் வல்லரசை பகைக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் தனது நாணயத்தை வைத்து மட்டுமே அதிகமாக வணிகம் செய்து இப்போழுது பொருளாதாரத்தில் வல்லரசு அந்தஸ்தை நெருங்கி விட்டது சீனா. தொடர்ந்து 8 மாதங்களாக போர், பொருளாதாரத் தடை என எல்லாவற்றையும் தாண்டி ரஷ்யா கம்பீரமாக நிற்பதற்கும் பின்னிருப்பது இது தான். தனது வணிகத்தில் 30%க்கு மேல் தனது நாணயம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது ரஷ்யா. தற்போது முழுமையாக தனது நாணயத்தை வைத்து வணிகத்தில் ஈடுபடுவதற்கான பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது ரஷ்யா. பல நாடுகளும் சர்வதேச வணிகத்திற்கு புது நாணயத்தை கொண்டு வந்து அனைவரும் பயன்படுத்துவோம் என கூறிவருகின்றன.
வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாணயங்களை வைத்து வணிகத்தில் ஈடுபடுவது அந்நாட்டின் பொருளாதாரம் மின்னல் வேகத்தில் துணை புரியும். இதை முழுமையாக உணர்ந்த இந்தியா சமயம் கிடைக்கும் போதெல்லாம் தனது அணிசேரா கொள்கையை முன்வைத்து போரால் பாதிக்கப்படும் நாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறது. அதன்மூலம் அந்த நாடுகளும் பலன் அடைந்திருப்பதால் இது ஒரு இரு பக்க லாப அணுகுமுறைதான். இதனால்தான் ரஷ்யா முன்வைத்த ரூபாய் - ரூபிள் வர்த்தகத்தை இந்தியா ஏற்க முடிவு எடுத்திருக்கிறது.
இந்திய வர்த்தக அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பான இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் (FIEO) தலைவர் ஏ.சக்திவேல், “ரூபாய் - ரூபிள் வர்த்தகத்திற்கான வழிமுறையை எளிதாக்க ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் சில வங்கிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த நிதியாண்டில் ரஷ்யாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 3.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த புது வணிகம் அமலாகும்போது அந்த ஏற்றுமதி 5 பில்லியன் டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
எப்போது முடியும் டாலர் போர்???
உலகில் டாலர் வணிகத்தை விட்டு வெளியேறும் முடிவை சதாம் உசேன், கடாபி உள்ளிட்டோர் பல வருடங்களுக்கு முன்பே எடுத்தனர் என்பதை நாம் மறக்கக்கூடாது. அதன்பின் அவர்கள் பொருளாதாரம் சடாரென உயரத்துவங்கியதும், அதன் பின் சில நாட்களில் அவர்கள் வல்லாதிக்க சக்திகளால் இல்லாமல் ஆக்கப்பட்டதும் வரலாற்றில் ஒரு கறையாகவே படிந்திருக்கிறது. சிறிய நாடுகள் என்பதால் அந்நாடுகளை அடக்க முடிந்த அமெரிக்காவால் தனக்கு சரிநிகர் நாடான ரஷ்யாவை துணிந்து வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. ரஷ்யாவுடன் கைகோர்த்து பல நாடுகள் தங்கள் நாட்டு நாணயத்தை முன்னிறுத்தி வணிகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டத் துவங்கி விட்டன. இனி அமெரிக்க டாலர் நிலை என்னவாகும்? அமெரிக்கா என்ன செய்யப்போகிறது? உலக நாடுகளின் இந்த புது முயற்சி வெற்றி பெறுமா? என்பதற்கான விடைகள் காலத்தின் கரங்களில் இருக்கிறது. என்னவென்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.