குடியுரிமைச் சட்டம் திருத்தம் குறித்து மலேசிய பிரதமர் மஹாதிர் மொஹமது தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டங்கள் ஒருபுறம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும், இந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்பாடு என மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. அதேபோல், பாஜகவினரும் சட்டத்திருத்தம் தொடர்பாக விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்கள் உலகின் கவனைத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில், கோலாலம்பூரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் மலேசிய பிரதமர் மஹாதிர் மொஹமது, குடியுரிமை சட்டம் குறித்து விமர்சித்ததோடு இது அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் பேசிய போது, “மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா, சில முஸ்லீம்களின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதேபோன்று நாங்கள் இங்கு செய்தால், என்ன நடக்கும் என்றே எனக்கு தெரியாது. குழப்பமும், நிலையற்ற தன்மையும் உருவாக்கும். எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், குடியுரிமைச் சட்டம் திருத்தம் குறித்து மலேசிய பிரதமர் மஹாதிர் மொஹமது தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மஹாதிர் பின் மொஹமது உண்மையில் தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் என்றும், இந்தியாவுக்கு உட்பட்ட ஒரு விஷயத்தில் அவர் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புதிய திருத்தச் சட்டம் மூன்று நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாகவும், அது எந்த இந்தியக் குடிமகனையும் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைச் திருத்தச் சட்டத்தின் உண்மைகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.