சீனாவில் சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் நச்சுக் கிருமி பரவி வருவதால் அங்கு செல்லும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் கொரனோ வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது. வேகமாக தொற்றும் இயல்பு கொண்ட இந்தக் கிருமி, சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவுக்கு பயணம் செய்ய இருப்பவர்கள், அங்கு சுவாசப் பிரச்னையால் உடல்நலமின்றி காணப்படுவோர்களின் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சீனா செல்லும் இந்தியர்கள் அங்குள்ள பண்ணைகள், உயிருள்ள விலங்குகள் விற்கப்படும் சந்தைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அசைவ உணவுகளை சமைக்காமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனா சென்று திரும்பும் பயணிகளுக்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ சோதனைகள் நடத்தும்படியும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.