கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய துருப்புகள் மீதான தாக்குதலை சீனா 2 நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு செய்துள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 15ஆம் தேதி இரவு கல்வான் பகுதியில் நடந்த திடீர் தாக்குதலில், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன தரப்பு இந்த தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியதாகவும், இதன் விளைவாக ஏற்படும் வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு சீன ராணுவம்தான் நேரடி பொறுப்பு எனவும் சாடியுள்ளது. ராணுவ வீரர்களில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர்.
ஆற்றில் அடித்து சென்று காணாமல் போன உடல்களை தேடிவந்ததாகவும், சுமார் 20 ராணுவ அதிகாரிகள் இதில் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, அடுத்த நாள் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் உதவியுடன் எல்லைப் பாதுகாப்பு கோடு பகுதியில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சுமார் 4 கி.மீ. தேடுதல் பணியை மேற்கொண்டு காயமடைந்தவர்களை மீட்டனர். இந்நிலையில் இந்தியா மீதான தாக்குதலை சீனா 2 நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு செய்துள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், 'சம்பவத்தன்று கல்வான் பகுதியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்திய ராணுவத்தினர் வந்தபோது சீனர்கள் ஒரு உயரமான பகுதியில் சிற்றாறை தடுத்து, நீரை வெளியேற்றி உள்ளனர். அதிவேகமாக அடித்து வந்த தண்ணீரில் பல இந்திய வீரர்கள் விழுந்துள்ளனர். மேலும் பல வீரர்களை சீன வீரர்கள் கல்வான் ஆற்றில் தள்ளிவிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், இந்திய துருப்புகளின் பலத்தை அறிய ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டு சீனர்கள் உளவு பார்த்தனர். அதன்படி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் மறுபுறத்தில் சீனர்கள் தங்கள் படையை அதிகரித்தனர். பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, கூர்மையான ஆயுதங்களை சீனர்கள் வைத்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.