45,000 டன் ரஷ்ய சூரியகாந்தி எண்ணெயை அதிக விலைக்கு வாங்குகிறது இந்தியா
ஏப்ரல் மாதத்தில் இறக்குமதிக்கான அதிக விலையில் 45,000 டன் ரஷ்ய சூரியகாந்தி எண்ணெயை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது
போர் காரணமாக உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் சப்ளை நிறுத்தப்பட்டதை அடுத்து, உள்ளூர் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "உக்ரைனில் கப்பல் ஏற்றுமதி சாத்தியமில்லாததால், வாங்குபவர்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களைப் பெற முயற்சிக்கின்றனர்" என்று ஜெமினி எடிபிள்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரதீப் சௌத்ரி கூறினார். மேலும், இந்த நிறுவனம் ஏப்ரல் மாத இறக்குமதிக்காக 12,000 டன் ரஷ்ய சூரியகாந்தி எண்ணெயை ஒப்பந்தம் செய்தது.
இந்திய நிறுவனங்கள் கச்சா சூரியகாந்தி எண்ணெயை ஒரு டன் $2,150 என்ற மிக அதிகமான விலையில் வாங்கியுள்ளனர். இதில் ஏப்ரல் மாத இறக்குமதிக்கான இந்திய செலவு, காப்பீடு ஆகியவையும் அடங்கும். ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்குவதற்கு முன்பு கச்சா சூரியகாந்தி எண்ணெய் விலை டன்னுக்கு $1,630 ஆக இருந்தது என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்தியா முக்கியமாக ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து அதிகளவில் சூரியகாந்தி எண்ணெயை இறக்குமதி செய்கிறது. மேலும், இந்தோனேஷியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயிலை இறக்குமதி செய்கிறது, அதே போல சோயா எண்ணெயின் பெரும்பகுதி அர்ஜென்டினா மற்றும் பிரேசிலில் இருந்து வாங்கப்படுகிறது.