ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ருவாண்டா நாட்டு அதிபர் பால் ககமேவை சந்தித்து பேசினார்.
ருவாண்டா நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமரான மோடிக்கு, தலைநகர் கிகாலியில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பதிலுக்கு அந்நாட்டின் வீட்டுக்கொரு பசு வழங்கும் திட்டத்துக்காக இந்தியா சார்பில் 200 பசுக்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதையடுத்து அதிபர் ககமேவை சந்தித்த அவர், இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். இச்சந்திப்பின்போது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில் உகாண்டா நாட்டுக்கு இன்று செல்லும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசவுள்ளார். உகாண்டா நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் ஒருவர் உரையாற்றுவது இதுவே முதன்முறை. உகாண்டா பயணத்தை முடித்துக்கொண்டு இறுதியாக நாளை தென்னாப்பிரிக்கா செல்லும் மோடி, பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்துக்குப்பின் சீன அதிபர் சி ஜிங்பெங்கையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.