அமெரிக்காவில் பெண் ஒருவர் தான் பயணித்த வாடகைகாரின் டிரைவர் பழுப்பு நிறத்தில் இருந்ததால் அவரை பிடிக்காமல் பெப்பர் ஸ்பேரை அடித்த வீடியோவானது வைரலாகி வருகிறது.
ஒரு மனிதன் பிறக்கும் பொழுது தான் இந்த நிறமாக இருக்கவேண்டும் என்று விரும்பி பிறப்பதில்லை. அந்தந்த இடத்திற்கு மற்றும் குடும்ப மரபணு காரணத்தால் நிறங்களைப்பெருகிறார்கள். ஆனால் நிற வேறுபாட்டை ஒரு காரணமாக கொண்டு ஒரு சிலர் சிலரை வெறுக்கும் செயல் மிகவும் கேவலமானது. இது உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைப்பெற்று வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில்...
அமெரிக்க மக்கள் கருப்பினத்தவர்களை பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுவதுடன், ஏதாவது ஒரு காரணத்திற்காக அவர்கள் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். அப்படி கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் சம்பவம் அதிகம். அப்படி ஒரு சம்பவம் மீண்டும் அமெரிக்காவில் நடந்துள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த கில்பேட் என்ற பெண் ஊபர் வாடகை காரை புக்செய்து, தன் தோழியுடன் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர்கள் பயணித்த காரானது நியூயார்க் நகரத்தில் உள்ள செக்சிங்டன் பகுதியில் இரவு 11.20 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அச்சமயம், பின் இருக்கையில் இருந்த கில்பேட் திடிரென்று தனது கைப்பையை திறந்து அதில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து டிரைவரின் முகத்தில் அடித்துள்ளார்.
இதில் நிலைதடுமாறிய டிரைவர், என்ன...என்ன... என்று காரைவிட்டு இறங்கி விடுகிறார். கில்பேட் அருகில் அமர்ந்துக்கொண்டிருந்த அவரது தோழிக்கும் நடந்தது என்ன என்பது புரியாமல், கில்பேட்டை பார்த்து, நீ என்ன செய்கிறாய் புரியவில்லை... என்கிறார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
இதில் கில்பேட், அந்த டிரைவர் பழுப்பினத்தவர் என்றும் அதனால் அவர் முகத்தில் ஸ்ப்ரே அடித்ததாகவும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் சரியான காரணங்கள் ஏதும் தெரியவராத நிலையில், அந்த பெண் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், ஊபர் நிறுவனமானது டிரைவருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்போவதாகவும் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய அந்தப் பெண் ஊபர் பிளாட்பார்ம் மூலம் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊபர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “பயனரின் தாக்குதல் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. வன்முறையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அந்தப் பயனர் எங்கள் பிளாட்பார்மில் பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறார். காவல்துறையினரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம்” என்றார்.