பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்தியா தொடர்பான இம்ரான் கானின் நிலைப்பாடுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
இம்ரான் கான் தன்னுடைய தேர்தல் பரப்புரைகளில் பல முறை இந்திய அரசை தாக்கியே பேசி இருக்கிறார். குறிப்பாக ஒரு கூட்டத்தில் பேசிய இம்ரான், பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்ரோஷமான கொள்கைகளை கொண்டுள்ளார் என விமர்சனம் செய்தார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் இந்தியாவுடன் நட்புறவை மேம்படுத்த விரும்பினார், அதற்காக தான் 2015ஆம் ஆண்டு மோடியை தனது விருந்தாளியாக அழைத்து வந்தார் என கூறிய இம்ரான், இந்தியா பாகிஸ்தான் இடையிலான நட்புறவை மோசப்படுத்தவே பாஜக அரசு முயல்வதாக சாடினார். மேலும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் கொள்கையே பாஜவின் கொள்கை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் இந்திய ஊடகங்கள், தேர்தலில் முறைகேடு நடப்பதாக செய்தி வெளியிட்டதாகவும் இம்ரான் கூறினார். சர்வதேச அரசுகள் பாகிஸ்தானில் பலவீனமான அரசு அமைய வேண்டும் என விரும்புவதாக இந்தியாவை மறைமுகமாக சாடினார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அமைப்புகள் காரணம் என நவாஸ் ஷெரிப் நம்ப வைக்க முயன்றார் என இம்ரான் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் இம்ரான் கான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவே பேசியிருக்கிறார்.
இதனால் அவரை தாலிபான் கான் என்று அழைப்பவர்களும் உண்டு. இதன்காரணமாகவோ தான் என்னவோ, தேர்தலில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் இம்ரானுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயித்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவர் இம்ரான் கான். ஹபீஸ் சயித்துக்கு தூக்குத் தண்டனை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தவரும் இம்ரான் கான். காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை, ஐநா பாதுகாப்பு அவையின் தீர்மானத்தின் படி தீர்வு காண முயல்வேன் என இம்ரான் கான் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்.