பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள இருந்த நிலையில், நாடாளுமன்றம் மார்ச் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், “என்ன நடந்தாலும் ராஜினாமா செய்ய மாட்டேன்” என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2018ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறார், தற்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அவரை வெளியேற்றுவதற்கு ஓரணியில் திரண்டுள்ளதால் அவருக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது. எந்தவொரு பாகிஸ்தான் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து சில உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் விலகிவிட்டதாகவும், இதனால் இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
எனவே,நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னதாக அவரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்தது. ஆனால், "என்ன வந்தாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன்" என்று இம்ரான் கான் மறுத்துவிட்டார். மேலும், சண்டையின்றி சரணடையப் போவதில்லை என்றும், மோசடிகளின் அழுத்தத்தின் கீழ் ஏன் விலக வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வியாழன் இரவு தேசிய நாடாளுமன்ற செயலகம் வெள்ளிக்கிழமை அமர்வின் 15 அம்ச நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது, அதில் நம்பிக்கையில்லா தீர்மானமும் அடங்கும்.
பாகிஸ்தானின் பணவீக்கத்தை நிர்வகிக்கத் தவறியதாகக்கூறி இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள் 20 பேர் விலகியுள்ளதாகவும், அவர்கள் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரி இம்ரான் கான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்த பலம் 342 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, பெரும்பான்மை பெற 172 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. பிடிஐ தலைமையிலான கூட்டணி 179 உறுப்பினர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது, இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர், மேலும் சில சிறிய கட்சிகளும் அரசுக்கு ஆதரவளித்தன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தாங்களும் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக பிடிஐ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதான கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. எதிர்க்கட்சிகள் இணைந்து 163 இடங்களைக் கைப்பற்றி, இம்ரான் கானுக்கு எதிராக பிடிஐ கட்சியிலிருந்து விலகியவர்களும், ஆளும் அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து வாக்களித்தால் அரசாங்கத்தை எளிதாகக் கவிழ்க்க முடியும்.
பாகிஸ்தானில் அடுத்த பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.