ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்; இந்தியா, சீனா நிலை என்ன?

ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்; இந்தியா, சீனா நிலை என்ன?
Published on

ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கும் ரஷ்யா

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. இதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்திக்கொண்டன. குறிப்பாக, போருக்கு முன்புவரை ரஷ்யாவிடமிருந்து 2 சதவிகித அளவிலேயே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியது. அதுபோல், சீனாவும் அதிக அளவில் இறக்குமதி செய்தது.

இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தவிர நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவின் எரிபொருட்களை 20 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. இதன்மூலம் ரஷ்யா, $315 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. அதிலும் இந்த வருவாயில் பாதி, ($149 பில்லியன்) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து கிடைத்து வருகிறது.

முதலிடத்தில் சீனா!

கடந்த ஒரு வருட காலத்தில் (2022 பிப்.24 - 2023 பிப்.26), சீனா மட்டும் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்வதில் முதல் இடத்தில் உள்ளது. அது, கச்சா எண்ணெய்யை $54.9 பில்லியனுக்கும், நிலக்கரியை $5.7 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இயற்கை எரிவாயுவை $6.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மொத்தத்தில் ரஷ்யாவிடமிருந்து $66.6 பில்லியன் அளவுக்கு நிலக்கரி எரிபொருட்களை இறக்குமதி செய்து முதலிடத்தில் உள்ளது.

சீனாவை தொடர்ந்து ஜெர்மனி 2ம் இடம்!

$26.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் ஜெர்மனி, 2வது இடத்தில் இருப்பதுடன், கச்சா எண்ணெய்யை $13.3 பில்லியனுக்கும், நிலக்கரியை $0.7 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $12.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்தப் பட்டியலில் துருக்கி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

4வது இடத்தில் இந்தியா

$25.9 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் துருக்கி, கச்சா எண்ணெய்யை $14.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.6 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $7.5 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் $24.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக எரிபொருட்களை இறக்குமதி செய்திருக்கும் இந்தியா, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. அது கச்சா எண்ணெய்யை $20.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.3 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இயற்கை எரிவாயுவை ஒரு துளிகூட இறக்குமதி செய்யவில்லை.

5வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, மொத்தமாக $18.0 பில்லியனுக்கு இறக்குமதி செய்துள்ளது. இதில் கச்சா எண்ணெய்யை $16.2 பில்லியனுக்கும், நிலக்கரியை $1.0 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $0.8 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியா 2வது இடத்திலும் ($20.8 ), நெதர்லாந்து 3வது இடத்திலும் ($16.2) உள்ளது. அதேநேரத்தில், நிலக்கரியை இறக்குமதி செய்வதில் துருக்கி 2வது இடத்திலும் ($3.6), இந்தியா 3வது இடத்திலும் ($3.3) உள்ளது. இந்த இரண்டு பொருட்களின் பட்டியலிலும் சீனா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதில் ஜெர்மனி முதலிடத்திலும் ($12.1), துருக்கி 2வது இடத்திலும் ($7.5) உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்!

ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்யும் 20 நாடுகளில் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, எகிப்து ஆகிய 5 நாடுகளைத் தவிர ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, போலந்து, பிரான்ஸ், பெல்சியம், ஹங்கேரி, பல்கேரியா, சிலோவாகியா, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் அங்கம் வகித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள துருக்கியும் நேட்டோவில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த ஆண்டு முதல் போர் தொடுத்து வருகிறது. வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில், தற்போது 30 உறுப்பு நாடுகள் உள்ளன.

இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாட்டின் மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும் நேட்டோவின் ஒப்பந்தமாக உள்ளது. இதையடுத்துத்தான் இதில் சேர உக்ரைன் முயன்று வருகிறது. உக்ரைன் அதில் இணைந்தால், ரஷ்யாவுக்கு பாதிப்பு என்பதாலேயே ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரின் காரணமாகத்தான் ரஷ்ய எரிபொருளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதையடுத்து, ரஷ்யா தன் நாட்டின் எரிபொருட்களை சலுகை விலையில் விற்க முடிவு செய்தது.

இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எரிபொருளை இறக்குமதி செய்து வருகின்றன. இதற்கிடையே சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்ய - உக்ரைன் போருக்கு நடுநிலை வகிப்பதுடன், இந்தப் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com