உலகிலேயே மிகவும் அசுரத்தனமான உடலமைப்பை கொண்டிருக்கும் பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட இலியா யெஃபிம்சிக் என்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இலியா யெஃபிம்சிக்கின் வயது 34. 154 கிலோ எடையுடைய பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த இவர், செப்டம்பர் 11 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய செய்தித்தாள்களில் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலியா யெஃபிம்சிக் தினந்தோறும் 16,500 கலோரிகள் அளவிற்கு ஒரு நாளைக்கு 7 முறை சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். அதிலும், 108 சுஷி துண்டுகளையும், 2.5 கிலோ இறைச்சிகளை எடுத்துவந்ததாக கூறப்படுகிறது. மேலும், 6 அடி, 1 அங்குல உயரத்தில், 61 இன்ஞ் செஸ்ட் , 25 இன்ஞ் பைசெப்ஸூடன் இருக்கும் இவரை, “ 340 பவுண்டு பீஸ்ட்” என்றும் அழைத்து வந்துள்ளனர்.
இவர் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு சுயநினைவை இழந்து கோமா சென்றதால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்தநிலையில்தான், செப்டம்பர் 11 ஆம் தேதி இவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் வலிமை சார்ந்த எந்தப் போட்டிகளிலும் இவர், பங்குகொள்ளவில்லை என்றாலும், தான் தினமும் வொர்க் கவுட் செய்யும் வீடியோக்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலமே 306K க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களை பெற்றுள்ளார். இதனால், ” தி மியூடண்ட் “ என்ற பட்டத்தை பெற்றிருந்தார்.
இந்நிலையில், இவர் உயிரிழந்திருப்பது அவரது குடும்பம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.