”பாகிஸ்தானுக்கும் மோடி பிரதமராக கிடைத்திருந்தால்...” - வைரலாகும் வீடியோ பதிவு

”பாகிஸ்தானுக்கும் மோடி பிரதமராக கிடைத்திருந்தால்...” - வைரலாகும் வீடியோ பதிவு
”பாகிஸ்தானுக்கும் மோடி பிரதமராக கிடைத்திருந்தால்...” - வைரலாகும் வீடியோ பதிவு
Published on

”பிரதமர் மோடியைப் போன்று பாகிஸ்தானுக்கும் கிடைத்திருந்தால், அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார்” என அந்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ‘எங்கள் நாட்டையும் பிரதமர் மோடியே ஆட்சி செய்ய வேண்டும்’ எனச் சொல்லியிருக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர், ''இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்திருக்கக்கூடாது. அப்படி பிரியாமல் இருந்திருந்தால், அத்தியாவசியப் பொருள்களை குறைந்த விலைக்கு வாங்கி எங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திருப்பேன். பாகிஸ்தான், இஸ்லாமிய நாடாக உள்ளதே தவிர, ஆனால், இங்கு இஸ்லாம் முழுமையாக நிலைக்கவில்லை.

நம் நாட்டு பிரதமருடன் ஒப்பிடும்போது மோடியின் ஆட்சியின் சிறப்பானதாக இருக்கிறது. இந்தியாவில் மோடியை மக்கள் மதிப்பதுடன், அவரைப் பின்பற்றவும் செய்கின்றனர். அவர் பாகிஸ்தானுக்கும் கிடைத்திருந்தால், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார்” எனத் தெரிவித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பகிர்ந்துள்ளார். அந்நாட்டு பிரதமரின் ஆட்சி குறித்து மக்களிடம் சனா அம்ஜத் கேள்வி எழுப்பியபோது, வீடியோவில் பேசியவர் இத்தகைய பதிலைத் தந்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com