குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் தடை செய்தது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. குல்பூஷண் ஜாதவ்வை காப்பாற்றுவது தொடர்பாக பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டு அதற்கு பதில் இல்லாத நிலையில், இந்தியா நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. சர்வதேச நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை தடை செய்ய வேண்டும் என இந்தியா வாதிட்டது.
ஆனால், வியன்னா ஒப்பந்தப்படி வேவு பார்ப்பவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றம் தலையிட முடியாது என பாகிஸ்தான் வாதிட்டது. இந்நிலையில் சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை தடை செய்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க அது உத்தரவு பிறப்பித்துள்ளது.
குல்பூஷண் விவகாரத்தில் இந்தியாவின் முறையீடு நியாயமானதே எனக் கூறிய சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.