உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி சமமான ஊதியம் வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் பிஜார்னி பினிடிக்ட்சன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாகவும், இந்த நாட்களுக்குள் நிறுவனங்கள் அனைத்தும் இந்தப் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தகுந்த சான்றிதழ்களை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 25 ஊழியர்களுக்கு மேல் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இந்தப் புதிய சட்டம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.