மாலத்தீவு அதிபர் தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சாலி வெற்றி பெற்றுள்ளார்.
பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மாலத்தீவில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து, மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில், இப்ராகிம் முகமது போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராகிம் முகமது 58 புள்ளி 3 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இப்ராகிம் முகமதுவின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
மக்களின் முடிவை ஏற்று முறைப்படி பொறுப்புகளை ஒப்படைக்குமாறு யாமீனிடம் கூறியதாக இப்ராகிம் முகமது தெரிவித்துள்ளார். இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இப்ராகிம் முகமதுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சகம், மாலத்தீவில் அமையும் அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியில் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் வரவேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. தேர்தலில் யாமீனுக்கு ஆதரவாக முறைகேடுகள் நடக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், தேர்தல் முறையாக நடத்தப்படாவிட்டால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.