பொருளாதார நெருக்கடி காரணமாகவும் செலவைக் குறைக்கும் நோக்கத்திலும் ஆயிரக்கணக்கானோரை ஐபிஎம் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் பல்வேறு சிக்கலைச் சந்தித்து வருகிறது. இதில் முக்கியமானது பொருளாதாரச் சிக்கல். வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட பல்வேறு நிறுவனங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த ஊழியர்களை பணியைவிட்டு நீக்கி வருகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் கிட்டத்தட்ட 1000 பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.
ஐபிஎம் நிறுவனத்துக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அதன் பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஐபிஎம் நிறுவனத்தில் செய்தித் தொடர்பாளர் கூறியது " மிகவும் போட்டி நிறைந்த சவாலான சந்தையில் நிறுவனத்தை நிலையாக வைத்துக்கொள்ள இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெனிசில்வேனியா, கலிபோர்னியா, மிச்சூரி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎம் ஊழியர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்தியா உள்ளிட்ட உலகின் மற்ற நாடுகளிலும் பணிநீக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.