பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். அவரை நாடு கடத்தும் முயற்சியில் சிபிஐ ஈடுபட்டுள்ளது. கடந்த மே மாதம் 23ஆம் தேதி மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகா நாட்டுக்கு மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் டொமினிகா நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, உடல்நலக்குறைவு காரணமாக சோக்சிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆன்டிகுவாவிற்கு திரும்பினார். மெகுல் சோக்சி சட்ட விரோதமாக டொமினிக்காவில் நுழைந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் டொமினிகாவில் குடியேறுவதற்கு மெகுல் சோக்சி தடை விதிக்கப்பட்டவர் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.