கொரோனா நெருக்கடியில் அயராது உழைத்து வரும் இந்திய மருத்துவர்களுக்கு போப் பிரான்சிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அதை தடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. இதனால் மக்களின் பாடு பெரும் திண்டாட்டமாகி வருகிறது. இதனிடையே கொரோனாவில் இருந்து மீண்டு வர பல்வேறு உலக நாடுகள் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளன. இதேபோல், மருந்து பொருட்கள், சிகிச்சைக்கான தளவாடங்களை அனுப்பி வைக்க பல உலக நாடுகள் முன்வந்துள்ளன.
இந்த நிலையில் கொரோனா நெருக்கடியில் அயராது உழைத்து வரும் இந்திய மருத்துவர்களுக்கு, கத்தோலிக்கர்களின் தலைவராக அறியப்படும் போப் பிரான்சிஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் அனுப்பியுள்ள செய்தியில், “இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன். நோயுற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காட்டிலும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் மருத்துவ ஊழியர்கள்தான் என் எண்ணத்தில் இருக்கின்றனர்.
குறிப்பாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் மக்களுக்கு என் அனுதாபங்கள். மக்களின் உடனடி தேவைகளை சரி செய்வதற்காக ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அயராது உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பதுடன் விடாமுயற்சி, பலம் மற்றும் அமைதியை கடவுள் கொடுக்க வேண்டுமென வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.