ஆணும், பெண்ணும் இவ்வுலகில் அனைத்திலும் சமம். ஆணுக்கு கிடைப்பது போலவே பெண்களுக்கும் கல்வி, சொத்துரிமை கிடைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் பல்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெண்கள் ஆண்கள் துணையுடனே காரில் பயணிக்க முடியும். தனியாக அவர்களால் பயணிக்க முடியாது. இதனால் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்ததாக உணர்ந்தனர். தனியாக நம்மால் ஒரு காரை இயக்கிச் செல்ல முடியவில்லையே.. இந்த அரசாங்கம் இதற்கு அனுமதி தரவில்லையே என்ற வருத்தம் அவர்களுக்கு நெடுங்காலமாகவே இருந்து வந்தது.
அனைத்து நாடுகளிலும் பெண்களும் கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்குகின்றனர். கார்களை இயக்க வேண்டுமென்றால் அதற்கு மூன்று மாதமோ ஆறு மாதமே பயிற்சி பெற்றால்போதும். ஆனாலும் பெண்களை சவுதி அரேபியால் கார்களை இயக்க விடாமல் தடை விதித்திருந்து அடக்குமுறையாகவே பார்க்கப்பட்டது. இதனிடையே தங்களையும் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என சவுதி அரேபியாவில் பெண்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்ததோடு சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சவுதி மன்னர் சல்மான் பின் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி தங்களாலும் ஜாலியாக கார் ஓட்டிச் செல்லலாம் என நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன்படி இந்த உத்தரவு கடந்த 24-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே கார் ஓட்ட லைசென்ஸ் பெற்ற பெண்கள் சந்தோஷமாக தங்களது கார்களை இயக்கி மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் ஜித்தாவில் முதல் முறையாக கார் ஓட்டிய பெண் மருத்துவர் ஒருவர் தனது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நாளைக்கு கார் ஓட்டப்போகிறோம் என்ற மகிழ்ச்சி அதற்கு முந்தைய நாளில் இருந்தே தொற்றிக் கொண்டது. அதனால் முந்தைய நாளில் முழுசாக தூக்கமே வரவில்லை. வழக்கத்தைவிட அதிகாலையில் எழுந்துவிட்டேன். மிகுந்த சந்தோஷமாகவும், கார் ஓட்டப்போகிறோம் என்ற மகிழ்ச்சியுமே என் மனம் முழுக்க இருந்தது. ஆம். இப்போது முதன்முறையாக என் பணிக்கு நானே என் காரை ஓட்டிச் செல்கிறேன். முதல்முறையாக பின் இருக்கையில் அமராமல் முன் இருக்கையில் அமர்ந்தப்படி காரை ஓட்டிச் செல்கிறேன். இப்போதும் என்னால் நம்பவே முடியவில்லை. நான் தான் சவுதி அரேபியாவில் காரை ஓட்டிச் செல்கிறேனோ..? மகிழ்ச்சியாக உணர்ந்தேன். சாலையில் காரை ஓட்டிச் செல்லும் வழியில் போலீசார் நின்றிருந்தனர். அவர்களை நினைத்து நான் இனிமேல் பயப்படத் தேவையில்லையே..? நான் லைசென்ஸ் வைத்துள்ளேன். பின் அங்கிருந்த ஒரு கடை அருகே எனது காரை நிறுத்தி ஒரு காஃபி குடித்தேன். ஆஹா இது என்வாழ்வின் சந்தோஷமான நேரமிது ” என்றார்.
அவர் மேலும் பேசும்போது, “ பக்ரைனில் நான் மருத்துவப் படிப்பிற்காக சென்றபோது கடந்த 2005-ஆம் ஆண்டே லைசென்ஸ் வாங்கிவிட்டேன். அதுமட்டுமில்லாமல் நான் இன்டர்நேஷனல் லைசென்ஸூம் வைத்துள்ளேன். எனவே விடுமுறைக்காக துபாய், போர்ச்சுகல் சென்றபோது அங்கேயும் டிரைவிங் செய்துள்ளேன். ஆனால் டிரைவிங் டெஸ்ட்டிற்கான அனுமதி பெறுவது என்பது கடினமான விஷயம். என்னை எனது அப்பாவும், சகோதரியும் அதிகமாக ஊக்கப்படுத்தினார்கள். இப்போது சவுதி அரேபியாவிலும் காரை ஓட்டிவிட்டேன். இதை வரலாற்றில் சிறப்புமிக்க நாளாக கருதுகிறேன்.” என மனமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.