“அந்த 7 நிமிடத்திற்கு நான்தான் உலகின் No.1 பணக்காரன்”-எலன் மஸ்க்கை மிரளவைக்கும் யூட்யூபர்!
உலகின் நம்பர் 1 பணக்காரர் யார் என்பதில் “நீயா? நானா?” என கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கும், அமேசான் நிறுவன ஜெஃப் பெசாஸும். இதில் அண்மைய காலமாக மஸ்கின் கை ஓங்கியிருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையில் உலகின் நம்பர் 1 பணக்காரர் நான்தான் என தனது பெயரை தெரிவித்துள்ளார் யூட்யூபர் ஒருவர்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த அந்த யூட்யூபரின் பெயர் மேக்ஸ் ஃபோஷ் (Max Fosh). 26 வயதான இவர் எப்போதுமே மீடியா சார்ந்த பணிகளில் பிஸியாக இயங்கி வருபவர். இந்த நிலையில் உலகின் நம்பர் 1 பணக்காரர் நான்தான் எனவும், மஸ்கை முந்தியதாகவும் சொல்லியுள்ளார் அவர். இதனை வீடியோ மூலம் சொல்லியுள்ளார் அவர்.
அந்த வீடியோவில் எலான் மஸ்கை முந்த தன்னிடம் உள்ள திட்டம் என்ன என்பதை அவர் விளக்குகிறார். அதற்காக ‘அன்லிமிடட் மனி லிமிடட்’ என்ற நிறுவனத்தை நிறுவுகிறார். அந்த நிறுவனத்திற்காக 10 பில்லியன் பங்குகளை திரட்ட திட்டமிடுகிறார். ஒரு பங்கின் விலை 50 பவுண்டு. அதனை அவர் திரட்டினால் 500 பில்லியன் பவுண்டுக்கு அதிபதியாவார் அவர். அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இது 680 பில்லியன் டாலர்களாகும். இது மஸ்கின் சொத்து மதிப்பை காட்டிலும் 2 மடங்கு அதிகம். தனது ஐடியாவை மக்களிடம் சொல்லி பங்குகளை வாங்கிக் கொள்ளும்படி சொல்கிறார் அவர். ஒரே ஒரு பெண் மட்டும் பங்கை வாங்குகிறார். பின்னர் தனது நிறுவனம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துகிறார்.
பின்னர் சந்தை மதிப்பில் 500 பில்லியன் பவுண்ட் கொண்ட நிறுவனமாக அவரது நிறுவனத்தை அதிகாரிகள் அங்கீகரித்த கடிதம் ஒன்றையும் பெறுகிறார் மேக்ஸ். இருந்தாலும் அதில் போதுமான வருவாய் இல்லாத காரணத்தால் அவர் மோசடியில் ஈடுபட்டதற்காக சட்ட நடவடிக்கை பாயலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி அவரும் நிறுவனத்தை கலைத்து விடுகிறார்.
முன்னதாக இவர் தனது காரில் அவரது பயோ-டேட்டாவை அச்சிட்டு, அதனை பிபிசி செய்தி நிறுவன கார் பார்க்கிங்கில் நிறுத்தியிருந்தார்.