அதிக நேர ஷாப்பிங் செய்யும் மனைவிகள் அனைத்து இடங்களுக்கும் கணவனை உடன் அழைத்துச் செல்ல விரும்பாத போதும், அச்சமயங்களில் கணவன்மார்கள் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவும் பிரத்யேக “அறைகளை” அறிமுகம் செய்துள்ளது சீனா.
பொதுவாக ஷாப்பிங்கின்போது மனைவியுடன் செல்லும் கணவர்கள் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படும். எல்லா இடங்களுக்கும் கணவனை உடன் அழைத்துச் செல்வதை சில சமயம் மனைவிகளும் விரும்ப மாட்டார்கள். இந்த நேரங்களை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு சீனாவில் உள்ள மால் ஒன்று 'Husband Storage Pods' என்ற புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியிருக்கிறது. சீனாவின் ஷாங்காய் என்ற நகரில் உள்ள 'குளோபல் ஹார்பர்' என்ற மால் ஷாப்பிங்கின்போது மனைவிகளுடன் வரும் கணவர்களுக்காக 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட்' என்ற இந்த கண்ணாடி அறையை உருவாக்கியுள்ளது. இந்த அறையில் ஒரு சொகுசு நாற்காலி, திரைப்படங்களை பார்ப்பதற்கு ஒரு மானிட்டர், பல வீடியோ கேம்களை விளையாடி மகிழ ஒரு கேம்பேட் எனப் பல வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட்' தற்போது இலவசமாக இயங்கிவரும் நிலையில் விரைவில் இதற்கு கட்டணம் வசூலிக்க இந்த 'குளோபல் ஹார்பர்' மால் திட்டமிட்டுள்ளது. இதை பயன்படுத்தியப் பலர் இது நன்றாக உள்ளது என்றும் மீண்டும் பள்ளி நாட்களுக்குத் திரும்பிய அனுபவங்களை வழங்குவதாக உள்ளது என்றும் கூறிவருகின்றனர். மேலும் இது போன்று எல்லா மால்களிலும் வந்தால் மனைவியுடன் ஷாப்பிங் செல்வது நல்ல அனுபவமாக அமையும் என்று கணவன்மார்கள் பலர் தெரிவித்தனர்.