ஆப்கானிஸ்தானில் சந்தேகத்தின் பேரில் மனைவியின் மூக்கை கணவர் அறுத்து எறிந்தார். ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் மூக்கு கிடைத்துள்ளது.
காபூலில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சார்கா. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 28 வயதுடைய சார்காவை அவரது கணவர் தினமும் அடிப்பது வழக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது.
இதேபோல கணவனுக்கும் - மனைவிக்கும் ஒருநாள் சண்டை நடந்துள்ளது. இதில் கோபமடைந்த கணவன் கத்தியை வைத்து சார்காவின் மூக்கை அறுத்து எறிந்துள்ளார். இதனையடுத்து கிராமத்திலிருந்து சிகிச்சைக்காக பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு சார்கா காபூல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சார்கா கூறும்போது " நான் என் கணவரிடம் சொல்லாமல், என் தாய் தந்தை வீட்டிற்கு சென்றது அவருக்கு அவமானமாகிவிட்டது. என்னை ஒரு தோட்டத்திற்கு அழைத்து சென்று, ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய் என கேட்டு அடித்தார். அவரிடம் துப்பாக்கியும் இருந்தது. ஆனால் அவரின் சட்டை பையில் ஒரு கத்தியை எடுத்து என் மூக்கை அறுத்தார். இரத்தம் வழிந்தது. ஆனால் அவர் என்னை அங்கேயே தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். ஆனால் நல்வாய்ப்பாக மருத்துவர்களின் தீவிர சிகி்சசையால் எனக்கு மீண்டும் மூக்கு கிடைத்துள்ளது" என கூறியுள்ளார்.