உலகம்
அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஐடா புயல்: நியூயார்க், நியூஜெர்சியில் பெரும் சேதம்
அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஐடா புயல்: நியூயார்க், நியூஜெர்சியில் பெரும் சேதம்
அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஐடா புயல் காரணமாக நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஐடா புயலின் கோர தாண்டவத்தால் மோசமாக காட்சியளிக்கிறது நியூஜெர்சி மாகாணத்தின் தெற்குப் பகுதியான முல்லிகா ஹில். கால்நடைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கட்டுமானங்களும் புயலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்திருக்கின்றன. 15 முதல் 20 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால், பிரதான சாலைகள், ரயில்வே சுரங்கப் பாதைகள், வீடுகள் என அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியிருக்கின்றன. வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 18-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐடா புயலால் நியூயார்க் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கை சந்தித்திருக்கிறது. புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு என அடுத்தடுத்த பாதிப்புகள் காரணமாக நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையும் கொட்டி தீர்த்திருக்கிறது. புவி வெப்பமயமாதலின் தாக்கமே இதற்கு காரணம் என ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்திருக்கிறது.