குழந்தை பிறப்பு மற்றும் கருத்தடை உள்ளிட்ட காரணங்களுக்காக மருத்துவமனையில் சேர்ந்த 1800 பெண்களை அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்று ரகசியமாக படம்பிடித்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகானத்தின் சான்டிகோ நகரத்தில் ‘ஷார்ப் கிராஸ்மொண்ட்’ என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரசவம், கருத்தடை, கருத்தரிப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட துறைகளில் பிரபலம் வாய்ந்த மருத்துவமனையாக இது திகழ்கிறது. இந்த மருத்துவமனையில் லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை தொடர்பாக அதிர்ச்சிகரமான ஒரு குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது.
இந்த மருத்துவமனை ரகசிய கேமராக்கள் மூலம் சிகிச்சை பெற வந்த 1800 பெண்களை ஆபாசமாக படம்பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கருத்தரிப்பு, குழந்தை பிறப்பு, அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்கள், உறுப்புகள் தொடர்பான சிகிச்சை பெறும் பெண்கள், கருத்தடைகள், கருச்சிதைவு சிகிச்சைகள் ஆகியவற்றை ரகசிய கேமராக்கள் மூலம் படம் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டு, சிகிச்சை அளிக்கும்போதும் ஆபாசமாக படம்பிடித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் இதுவரை 81 பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகளின் மனுக்களில் அனைத்து பெண்களும், “பயம், பதட்டம், மன உளைச்சல், நம்பக தன்மை இழப்பு” ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மாறிவிடக்கூடாது, தவறான மருத்துகள் கொடுக்கப்பட்டதா? என்பதை கண்காணிக்கவே 3 கேமராக்களை பயன்படுத்தியதாக விளக்கமளித்துள்ளது. இருப்பினும் அந்த கேமராக்கள் பதிவாகும் காட்சிகள் அங்கிருக்கும் கம்யூட்டர்களில் ஸ்டோராகும் வகையில் இருப்பதால், அது அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.