குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் போராட்டகாரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற நிலையில், கலவரம் வெடித்தது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்-க்கு என தனி சட்டம் உள்ளது. இந்நிலையில், கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்தம் ஹாங்காங் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் ஹாங்காங் நகரில் கண்டன பேரணி நடைபெற்றது. பல்வேறு சாலைகளில் நடைபெற்ற இப்பேரணியில் லட்சகணக்கானோர் பங்கேற்று சட்டத்திருத்தத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் நள்ளிரவில், ஹாங்காங் நாடாளுமன்றம் முன்பு போராட்டகாரர்கள் திரண்டனர். புதிய சட்டம் திருத்தம் குறித்த விவாதம் நாளைமறுநாள் எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், அதுவரை நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையடுத்து காவல் துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரம் மூண்டது. இரும்பு தடுப்புகளை உடைத்த போராட்டகாரர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.