ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் 640 பேர் பயணித்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த விமானத்தின் சக்கரத்திலிருந்து மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலரும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை காபூல் விமான நிலையத்தின் சுவரை ஏறிக்குதித்து பலர் உள்ளே குதித்தனர். அப்போது கத்தார் புறப்பட்ட அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான சி-17 என்ற சரக்கு விமானத்தில், பலர் முண்டியடித்து ஏறினர். சிலர் விமானத்தின் சக்கரத்தை பிடித்து தொங்கியபடி பயணித்தனர். அதை ஒருவர் செல்பி வீடியோ எடுத்த நிலையில், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானம் பறக்கத் தொடங்கியபோது மூவர் கீழே விழுந்து இறந்த துயர சம்பவமும் நிகழ்ந்தது.
இந்த நிலையில், அமெரிக்க சரக்கு விமானத்தில் 640 பேர் பயணித்த புகைப்படம் வெளியாகி உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள், கத்தாரில் இறங்கிய அந்த விமானத்தின் சக்கரத்தில் இருந்து மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. காபூலிலிருந்து விமானம் புறப்படத் தொடங்கியது முதலான அத்தனை நிகழ்வுகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு அமெரிக்க விமானப்படை உத்தரவிட்டுள்ளது.