லெபனான் தலைநகர் பெய்ரூட் மக்களுக்கு அடிமேல் அடி விழுகிறது. நாற்பது நாள்களுக்கு முன்பு துறைமுக சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறிய விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர்.
அந்த வெடிவிபத்தின் காயங்கள் ஆறுவதற்குள் அடுத்த விபத்து. வியாழன்று எண்ணெய் மற்றும் டயர்கள் வைக்கப்பட்டிருந்த சேமிப்புக்கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது வானத்தை நோக்கி கரும்புகை பரவியதால் மக்கள் பீதியடைந்து ஓட்டமெடுத்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிப்படைந்த சேமிப்புக் கிடங்கில் இருந்து பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அங்கே கட்டுமானப் பணிகளும் நடந்துகொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேமிப்புக்கிடங்குளில் இருந்து கடந்த வெடிவிபத்தின் சேதாரங்களை அகற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.