இந்தியாவில் உள்ள பல சீன நிறுவனங்கள் அந்நாட்டு ராணுவத்திற்கு உளவு வேலை பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன வீரர்கள் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சீனா இந்தியா மீது சைபர் தாக்குதலையும் நடத்தியதாக சொல்லப்பட்டது.
இதனிடையே பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை
விதித்தது. மேலும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டுமென பலர் குரலெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள பல சீன நிறுவனங்கள் அந்நாட்டு ராணுவத்திற்கு உளவு வேலை பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடவடிக்கை எடுப்பது குறித்து இதுவரை முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஷிண்டியா ஸ்டீல்ஸ், அலிபாபா, ஹுவே, சிஇடிசி உள்ளிட்ட சில நிறுவனங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்நிலையில் செல்போன் செயலிகளை தடைசெய்ததைப் போல இந்த நிறுவனங்கள் மீதும் அரசு ஏதும் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுந்துள்ளது, மேற்கண்ட நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் பல நூறு கோடிகளில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் எனவே நடவடிக்கை எந்த கோணத்தில் இருக்குமெனவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது