ஒருவழியாக ட்விட்டரை எலான் மஸ்க் தனக்கு சொந்தமாக்கிவிட்டார். ட்விட்டரை வாங்கிய கையுடன் பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார். உலகின் முன்னணி பணக்காரராக எலான் மஸ்க் இருந்தாலும் கூட, ட்விட்டரை விலைக்கு வாங்குவது அவருக்கு சுலபமாக அமையவில்லை.
எலான் மஸ்க் ட்விட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் (3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு) வாங்கியுள்ளார். இந்த பணத்தை தனது தனிப்பட்ட சொத்துக்கள், முதலீட்டு நிதிகள் மற்றும் வங்கிக் கடன்கள் மூலம் திரட்டியுள்ளார். இத்தனை கோடி பணத்தை அவர் எப்படி திரட்டினார் தெரியுமா?
எலான் மஸ்க் உலக பணக்காரராக இருந்தாலும் கூட தனது தனிப்பட்ட சொத்திலிருந்து $15 பில்லியனுக்கு மேல் எடுக்க கூடாது என முடிவெடுத்துயிருந்தார். எனவே தனது கார் நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் சில பங்குகளை வைத்து, அதன் மூலம் கிடைத்த கடனிலிருந்து 12.5 பில்லியன் டாலர்களை பெற்றார். பின்பு சரியான நேரம் பார்த்து ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு சுற்றுகளில் சுமார் $15.5 பில்லியன் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை விற்றார்.
அடுத்ததாக முதலீட்டு குழுக்களின் நிதியை பயன்படுத்தியுள்ளார். அந்த வகையில் கத்தார் முதலீட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கத்தாரின் இறையாண்மை செல்வ நிதியான கத்தார் ஹோல்டிங்கும் இதில் சிறிதளவு முதலீடு செய்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் தலாலும் இதில் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு வங்கி மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து சுமார் 13 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளார்.
எலான் மஸ்க் முக்கியமான சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கும்போது, சிங்கிள் சோர்ஸ் மூலம் ரிஸ்க் எடுக்காமல், மல்ட்டிபிள் சோர்ஸ் மூலம் வாங்கியுள்ளது, ஸ்மார்ட் மூவ் என முதலீட்டாளர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் 35 மில்லியனை ட்விட்டரில் முதலீட்டு செய்துள்ளதன் மூலம், ட்விட்டரில் 2வது பெரிய முதலீட்டாராக இருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.