சன்னி பிரிவு இஸ்லாமிய ஏமன் அரசிற்கு எதிராக 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் ஹவுதி ஆயுதக்குழு. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவையும் இஸ்ரேலையும் யூதர்களையும் வீழ்த்துவோம் என்பதே இந்த அமைப்பின் பிரதான முழக்கமாக இருந்து வருகிறது.
ஹவுதி பழங்குடியினரே இந்த அமைப்பில் பெரும்பாலும் உறுப்பினர்களாக உள்ளனர். ஷியா பிரிவு இஸ்லாமியர்களான ஹவுதிக்கள், சன்னி பிரிவு இஸ்லாமியர்களை கொண்டு அமைந்த ஏமன் நாட்டு அரசை எதிர்த்து போராடி வருகின்றனர். ஏமனின் சிறு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதிக்கள் நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர போராடி வருகிறார்கள்.
ஹவுதிக்களுக்கு எதிரான ஏமன் அரசு நடத்தும் சண்டைக்கு சவுதி அரேபியாவும் உதவி வருகிறது. இதன் காரணமாக சவுதி அரேபிய நகரங்களை கூட ஹவுதி ஆயுதக்குழுவினர் அவ்வப்போது ஏவுகணைகளை வீசி தாக்குவது உண்டு. ஷியா இஸ்லாமியர்கள் நிறைந்த ஈரானும் ஹவுதிக்களுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை அளித்து வருவதாக தகவல்கள் உண்டு.
இந்த சூழலில்தான் இஸ்ரேலுக்கு எதிராகவும் தங்கள் போர் தொடங்கியுள்ளதாக ஹவுதிக்கள் அறிவித்துள்ளனர். ஹமாஸ் தவிர லெபனானிலிருந்து ஹிஸ்புல்லாக்கள், சிரியாவிலிருந்து ஈரான் ஆதரவு படைகள் இஸ்ரேலை தாக்கி வரும் நிலையில் ஹவுதிக்களும் தற்போது அதில் இணைந்து கொண்டுள்ளது. இது போர் மேலும் தீவிரமடையுமா என்ற கவலையை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏமனிலிருந்து சவுதி அரேபியா என்ற பெரும் நிலப்பரப்பை கடந்து ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் தாக்கியது கவனத்தை ஈர்த்துள்ளது.