சுவிட்சர்லாந்து: 15 பேருடன் ரயிலைக் கடத்திய மர்ம நபர்.. 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்!

சுவிட்சர்லாந்தில் 32 வயது நிரம்பிய மர்ம நபர் ஒருவர் ரயிலைக் கடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்துட்விட்டர்
Published on

சுவிட்சர்லாந்தில் 14 பயணிகள் மற்றும் 1 நடத்துநருடன் யவெர்டன் (Yverdon) ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இந்த ரயிலை 32 வயது நிரம்பிய மர்ம நபர் ஒருவர் கடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரயிலைக் கடத்திய அந்த மர்ம நபர், பயணிகளிடம் தாம் வைத்திருந்த கத்தி மற்றும் கோடரியால் அவர்களை மிரட்டி பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளார். இதில் 14 பயணிகள் அடக்கம். அத்துடன் ரயிலில் இருந்த நடத்துநர் ஒருவரையும் மிரட்டியதுடன், பயணிகளுக்கு அருகில் வரும்படி கூறியுள்ளார். ஆனால், அவர் அதற்குள் இத்தகவல் குறித்து போலீஸுக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் முதலில் வாட்ஸ்அப் மூலம் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த நபர் முதலில் ஈரானின் பிரதான மொழியான பார்சி மொழியிலும் அதன்பிறகு ஆங்கிலத்திலும் பேசியுள்ளார். தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தை மாலை 6:35 முதல் இரவு 10:30 மணி வரை என சுமார் 4 மணி நேரம் தொடர்ந்த நிலையில், இறுதியில் ரயிலில் அதிரடியாக போலீசார் நுழைந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கோடரியால் போலீஸாரைத் தாக்க பாய்ந்ததால் வேறு வழியில்லாமல் போலீஸார் அந்த மர்மநபரைச் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மர்ம நபர் எதற்காக ரயிலைக் கடத்தினார், அவரது நோக்கம் என்னவாக இருந்தது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது முதல் முறையல்ல. ஏற்கெனவே இதேபோன்று சில சம்பவங்கள் நடைபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக கடந்த 2021 நவம்பர் மாதம், கடிகார நிறுவனத்தின் முதலாளியும் அவரது குடும்பத்தினரும் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களிடமிருந்த தங்கத்தைத் திருடி பிரான்சுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் 2022 ஜனவரியில், விலைமதிப்பற்ற உலோகங்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு நிறுவனத்தின் பெட்டகங்களை அணுகும் முயற்சியில் இரண்டு மர்ம நபர்கள் அங்கிருந்த ஊழியர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்தனர். ஆனால் இறுதியில் அவர்கள் அதைக் கொள்ளையடிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com