ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு இஸ்ரேல் தரப்பு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. 10ஆவது நாளாக போர் நீடிக்கும் நிலையில் காஸா பகுதியில் 2,670 பேர் இறந்துள்ளனர். மேலும் 9, 600 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் காஸாவில் உள்ள மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். இவர்களில் பலர் அவசர சிகிச்சை பிரிவிலும் டயாலிசிஸ் பிரிவிலும் இருக்கின்றனர். இவர்கள் தவிர பச்சிளங்குழந்தைகளும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து வரத்து இல்லாததால் மருத்துவமனைகளில் எரிபொருள் இன்றுடன் தீர்ந்துவிடும் என கணிக்கப்படுகிறது. இதனால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுவொருபுறம் இருக்க காஸாவில் உள்ள மருத்துவமனைகளை இஸ்ரேல் ராணுவம் தேடித்தேடி தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. "மருத்துவமனையில் குண்டு வீசுவதை அவர்கள் பெருமையாக உணர்கிறார்கள்" என்கிறார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் அசால அல் பாட்ஸ் என்பவர்.
இந்நிலையில் தரைவழித்தாக்குதலும் தொடங்கிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என அஞ்சப்படுகிறது. தெற்கு பகுதியில் ஹமாஸ் படைகள் இஸ்ரேலை தாக்கி வரும் நிலையில் வடக்குப்பகுதியில் உள்ள லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா படைகள் ராக்கெட்டுகளை ஏவி தாக்கி வருகின்றன. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் ஒருவர் இறந்துள்ள நிலையில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு எச்சரிக்கை தாக்குதல் மட்டுமே என்றும் போர் அல்ல என்றும் ஹிஸ்புல்லா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே ஹமாஸை அழிக்காமல் விடமாட்டோம் என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு மீண்டும் எச்சரித்துள்ளார். காஸா மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடனே அளிக்க இஸ்ரேலுக்கு ஐநா பொதுச்செயலாளர் குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே நேரம் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விரைந்து விடுவிக்க ஹமாஸுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.