பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹோண்டா அட்லாஸ் கார்ஸ் என்ற நிறுவனம் தற்காலிகமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹோண்டா, தன் நிறுவனத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையில், நிறுவனத்தின் விநியோக சங்கிலி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஹோண்டா அட்லாஸ் கார்ஸ் என்கிற பெயரில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், கடந்த மார்ச் 8ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ”உற்பத்தி பணிகளை மேலும் தொடர முடியாத காரணத்தால், பாகிஸ்தானில் உள்ள ஹோண்டா கிளை நிறுவனம், தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. இதன்படி வரும் 31ஆம் தேதிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஆட்டோமொபைல் பாகங்களை வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானில் இறக்குமதி செய்வது செலவு மிகுந்ததாக உள்ளது. இதனால் ஹோண்டா மட்டுமின்றி பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்திப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாகவும், சில தொழிற்சாலைகள் நிரந்தரமாகவும் மூடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தி துறை அதிகளவில் வெளிநாட்டு உற்பத்தி பொருட்களை நம்பியுள்ளது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் அரசு தற்போது விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் இத்துறையின் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பும் பாதிக்கப்படுவதால் உற்பத்தி செலவுகள் அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் இதனாலேயே ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும் அங்குள்ள பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.