தேனீக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக 100க்கும் மேற்பட்ட தேனிக்களை உடலில் மொய்த்துக் கொண்டிருக்க போட்டோவவுக்கு கூலாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஹாலிவுட் சினிமா நடிகை ஏஞ்சலினா ஜூலி. நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகை இதழுக்காக இந்த போட்டோ ஷூட்டை அவர் நடத்தியுள்ளார் என தெரிகிறது. இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் அவரது நோக்கமாம்.
அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற கேப்ரியலா ஹியர்ஸ்ட் ஆடையை அணிந்து கொண்டிருக்கும் ஏஞ்சலினா நேராக கேமராவை நோக்கியபடி போஸ் கொடுக்கிறார். பூக்களை பார்த்ததும் படையெடுக்கும் தேனீக்களை போல தேனீக்கள் அவரது தோள்பட்டை, மார்பு மற்றும் முகத்திலும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.
“18 நிமிடங்கள் வரை ஏஞ்சலினாவின் உடலில் தேனீக்கள் மொய்க்க அவர் போட்டோ ஷூட் நடத்த வேண்டியிருந்தது. இந்த பெருந்தொற்று நேரத்தில் இது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. இருந்தாலும் பாதுகாப்புடன் செய்து முடித்துள்ளோம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ரிச்சர்ட் அவெடன் எடுத்த ‘பீ கீப்பர் போர்ட்ரைட்’ படத்தை முன்மாதிரியாக வைத்து அதே முறையை பின்பற்றி இந்த படத்தை எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ள இந்த போட்டோவை கேமரா கண்களில் கவர் செய்த புகைப்படக்காரர் டான் விண்டர்ஸ்.
இந்த போட்டோ ஷூட்டின் போது ஏஞ்சலினா ஜூலியை தவிர அனைவருமே பாதுகாப்பு கவச உடைகள் அணிந்துள்ளனர். தேனீக்களை கவருவதற்காக ஏஞ்சலினா ஜூலி உடலில் பெரோமோன் ரசாயனமும் பூசப்பட்டுள்ளது.