மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு கடைசி கெடு
மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தாமாக முன்வந்து சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான காலக்கெடு முடிவடைவதை அடுத்து, ஏராளமானோர் குடியுரிமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.
மலேசியாவில் கல்வி, தொழில் உள்ளிட்டவற்றுக்காக சட்டவிரோதமாக குடியேறியவர்களை தண்டிக்காமல், அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 31-க்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தங்களுக்குரிய ஆவணங்களை குடியுரிமை அலுவலகத்தில் காண்பித்தால், கைது நடவடிக்கை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் இதை பலர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடைசி கட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மலேசியாவின் புத்ரஜெயா நகரில் இருக்கும் குடியுரிமை அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சொந்த நாடுகளுக்கு தாமாக முன்வந்து செல்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக, இந்தோனேசியாவை சேர்ந்த 53 ஆயிரத்து 328 பேரும், அதற்கு அடுத்தபடியாக வங்கதேசத்தை சேர்ந்த 38 ஆயிரத்து 734 பேரும் சொந்த நாடு செல்ல விண்ணப்பித்துள்ளனர். 22 ஆயிரத்து 964 பேருடன் மூன்றாவது இடத்தில் இந்தியர்களும், அதைத் தொடர்ந்து 6 ஆயிரத்து 923 பேருடன் மியான்மர் நாட்டினரும் உள்ளனர்.